நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தது: தலைமைத் தேர்தல் ஆணையர்
March 16, 2024 at 6:23 pm
டெல்லி: மக்களவை தேர்தலுக்காக நாடு முழுவதும் 10.5 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். 1.50 கோடி தேர்தல் பணியாளர்கள் இந்தியா முழுவதும் பணியாற்ற உள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலுக்காக 55 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
மேலும் நாடு முழுவதும் 96.88 கோடி பேர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலைவிட வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 6% வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். ஆண் வாக்காளர்கள் 49.7 கோடி, பெண் வாக்காளர்கள் 47.1 கோடி, மூன்றாம் பாலினம் 48,044 பேர் உள்ளனர். 100 வயதை கடந்த 2.18 லட்சம் பேர் மக்களவை தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். ஏப்.1-ம் தேதி வரை 18 வயது எட்டுபவர்கள் வாக்காளர்களாக பதிவு செய்யலாம்.
சுமார் 20 கோடி இளம் வாக்காளர்கள் மக்களவை தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். 1.8 கோடி முதல்முறை வாக்காளர்கள், மக்களவை தேர்தலில் பங்கேற்க உள்ளனர். வாக்காளர் பட்டியலில் சேர இன்றைய இளம்தலைமுறையினர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர் என தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்தார்.
தேர்தல் பிரச்சார இரைச்சல், மறுதேர்தல் வாய்ப்பை குறைக்கவும், வன்முறையின்றியும் தேர்தல் நடைபெறுவது உறுதி செய்யப்படும் என ராஜீவ் குமார் தெரிவித்தார்.
இந்தியாவின் நான்கு முனைகளிலும் தற்போது உள்ள பருவநிலையை கருத்தில் கொண்டு வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும். ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் குடிநீர், கழிவறை, சக்கர நாற்காலி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு மக்களவை தேர்தலில் பிளாஸ்டிக், காகித பயன்பாடு குறைக்கப்படும் என தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கூறினார்.
ஆள்பலம், பண பலம், வதந்தி, நடத்தை விதிமீறல் ஆகிய நான்கும் சவாலாக உள்ளன. 4 பலத்தை கட்டுப்படுத்தி அமைதியான முறையில் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது. ஆள்பலத்தை பயன்படுத்தி முறைகேடு செய்வதை தடுக்க தேவையான அளவு பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்படுவர் என தலைமைத் தேர்தல் ஆணையர் கூறினார்.
50% வாக்குச்சாவடிகளில் நடைபெறும் வாக்குப்பதிவு இணையவழியில் நேரலை செய்யப்படும். தேசிய, மாநில, மாவட்ட எல்லைகளில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்படும். எல்லைகளில் டிரோன் மூலம் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படும். தன்னார்வலர்கள், ஒப்பந்த பணியாளர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தக் கூடாது. அரசியல் கட்சிகளுக்கு அனுமதி வழங்குவதில் எந்த பாரபட்சமும் கூடாது என தலைமைத் தேர்தல் ஆணையர் கூறியுள்ளார். அண்மையில் நடந்து முடிந்த 11 சட்டமன்றத் தேர்தல்களில் ரூ.3,400 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தேர்தலின்போது சட்டவிரோத பணம் பறிமுதல் செய்யப்படுவது, 5 ஆண்டுகளில் 8 மடங்கு அதிகரித்துள்ளதாக தலைமைத்தேர்தல் ஆணையர் தெரிவித்தார்.
நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தது. ஆன்லைன் மூலம் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை தடுக்க ஆன்லைன் பரிவர்த்தனையும் கண்காணிக்கப்படும். தேர்தல் ஆணையர்கள் உள்பட யாரை வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம்; ஆனால் வதந்தி பரப்பக் கூடாது. பொய்ச் செய்திகளை உருவாக்கி வெளியிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சமூக வலைதளங்களில் அரசியல் கட்சியினர் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் தலைமைத் தேர்தல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மதுபானம், பணம், பரிசுப் பொருட்கள், போதைப்பொருள் நடமாட்டம் தடுக்கப்படும். மாலை, இரவு நேர்ங்களில் வங்கிகள் வாகனங்களில் பணம் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. செய்திகள் போல மறைமுக விளம்பரங்கள் செய்யக் கூடாது. தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் வெறுப்பு பேச்சுகளை தவிர்க்க வேண்டும். உறுதி செய்யப்படாத, திசை திருப்பக் கூடிய விளம்பரங்களை அரசியல் கட்சிகள் வெளியிடக் கூடாது. நட்சத்திர பேச்சாளர்கள் மேடை நாகரிகத்தை கடைப்பிடிக்க வேண்டும் தலைமைத் தேர்தல் ஆணையர் கூறியுள்ளார்.
மக்கள் கருத்து
மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.